கால்நடைப்பட்டி மற்றும் சாவடிகளைப் பராமரித்தல்

Nellai Pasanga 😍

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

கால்நடைப்பட்டி மற்றும் சாவடிகளைப் பராமரித்தல்

கால்நடைப்பட்டி மற்றும் சாவடிகளைப் பராமரித்தல்:

கால்நடைப்பட்டிகள்:
·  கிராம நிர்வாக அலுவலரே தங்கள் பொறுப்பு கிராமங்களில் கால்நடைப்பட்டிகளுக்கு பொறுப்பு அலுவலராவார்.
·  இவைகள் குறித்து தனி நிதி விதி தொகுப்பில் விவரிக்கப்பட்டுள்ளன.
·  ஒரு நிலத்தின் சொந்தக்காரரோ, அனுபவித்து சாகுபடி செய்பவரோ, குத்தகைதாரரோ, அடமானதாரரோ அந்த நிலத்தில் வழி மீறி நுழைந்து அதிலுள்ள பயிர் அல்லது விளைச்சலை சேதம் உண்டுபண்ணுகிற கால்நடைகளை பிடித்து அதனை பிடித்த 24 மணி நேரத்துக்குள் கால்நடைப்பட்டிக்கு அனுப்பி அடைக்கலாம்.
·  இத்தகைய கால்நடைகளைப் பிடிப்பதற்கு யாரேனும் தடுத்தால் தேவைப்படும்போது கிராமப் பணியாளர்கள் அல்லது காவல்துறை அலுவலர்கள் உதவி செய்யலாம்.
·  சில கால்நடைகள் வழி மீறி, அரசுக்கு சொந்தமான தோட்டங்கள் கால்வாய்கள் மற்றும் ஏரிக்கரைகளும் சேதம் விளைவிக்குமேயானால் அத்தகைய கால்நடைகளையும் பிடித்து 24 மணி நேரத்துக்குள் பட்டியில் அடைக்கலாம்.
·  கால்நடைகளை பட்டியில் அடைக்கும் போது பட்டிக் காப்பாளர் கால்நடைகளை கொண்டுவரும் நபரிடம் கால்நடை விபரம், யாரால் அடைக்கப்பட்டது, எப்போது அடைக்கப்பட்டது என்ற விவரங்களுடன் கூடிய பற்றுச் சீட்டினை படிவம் 34-இல் வழங்கி கையொப்பம் பெற வேண்டும். அத்தகைய விவரங்களை படிவம் 36-இல் பராமரிக்கப்படும் பதிவேட்டில் கலம் 1 முதல் 6 வரை உடனே பதிய வேண்டும்.
·  பட்டியில் அடைக்கப்பட்ட கால்நடைகளுக்கு தீனி போடுவது, தண்ணீர் காட்டுவது போன்ற பணிகளை கிராமப் பணியாளர் மூலம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
·  கால்நடைப்பட்டியை வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் மற்றும் மேல் அலுவலர்கள் கிராமத்துக்குச் செல்லும்போது தணிக்கை செய்ய வேண்டும்.
·  பட்டியில் அடைக்கப்பட்ட கால்நடைகள் சரியாக பராமரிக்கப்படுகின்றனவா மற்றும் அடைக்கப்பட்ட கால்நடைகள் உரிய முறையில் கணக்குகளில் கண்பிக்கப்பட்டுள்ளனவா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.
·  பட்டியில் அடைக்கப்படும் கால்நடைகளுக்கு தீனிச் செலவு கட்டணங்களை மாவட்ட ஆட்சியர் அவ்வப்போது நிர்ணயிப்பார். அதன்படி காப்பாளர் தீனிக்கு ஆகும் செலவினை நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களுக்கு மேற்படாமல் கால்நடை உரிமையாளரிடம் அவைகளை விடுவிக்கும் போது அபராதத்துடன் வசூல் செய்ய வேண்டும். கால்நடை உரிமையாளர் யாரும் தீனிபோடுவதை அனுமதிக்கக் கூடாது.
·  உண்மையான சொந்தக்காரர் அல்லது அவரது முகவர், பட்டியில் அடைக்கப்பட்ட கால்நடைகளை விடுவிக்க கோரும்போது அவரிடமிருந்து அபராதத் தொகை மற்றும் தீனிச் செலவை வசூலித்துக் கொண்டு படிவம் 35-இல் பற்றுச் சீட்டினை தயார் செய்து ஒரு பிரதியை சொந்தக்காரரிடம் வழங்கி கால்நடைகளை விடுவிக்க வேண்டும்.
·  அதே நேரத்தில் படிவம் 36-இல் பராமரிக்கப்படும் பதிவேட்டிலும் அவருடைய கையொப்பத்தை பெறவேண்டும். அபராதத்தொகை அவ்வப்போது அரசால் நிர்ணயிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாறுபட்டு இருக்கும்.
·  அரசாங்க பாக்கிக்காக ஜப்தி செய்யப்பட்ட கால்நடைகளைப் பட்டியலில் அடைக்க வேண்டும். அத்தகைய கால்நடைகளுக்கான தீனி செலவைப் பாக்கிதாரரிடம் வசூல் செய்து கொள்ளலாம் அல்லது ஜப்தி செய்யப்படும் கால்நடைகளை ஏலம் விடுவதினால் கிடைக்கும் ஏலத்தொகையில் பிடித்தம் செய்து கொள்ளலாம். அபராதம் வசூல் செய்ய வேண்டியதில்லை.
·  அடைக்கப்பட்ட கால்நடையை ஒரு வாரத்திற்குள் யாரும் உரிமை கோராத பட்சத்தில் அதன் விவரத்திணை படிவம்-37-இல் அறிக்கை தயார் செய்து வட்டாட்சியருக்கு அனுப்ப வேண்டும்.
·  அந்த அறிக்கை பெற்றவுடன் உடனடியாக வட்டாட்சியர் கீழ்க்கண்ட விவரங்கள் அடங்கிய அறிவிப்பு ஒன்றினை கால்நடைகளை பிடித்த இடத்திற்கு அருகாமையில் உள்ள கிராமத்திலும் , கால்நடைப்பட்டி உள்ள கிராமத்திலும் தண்டோரா மூலம் அறிவிக்க வேண்டும்.
·  (அ) கால்நடைகளின் எண்ணிக்கை விவரம்
·  (ஆ) பிடிக்கப்பட்ட இடம்
·  (இ) பட்டியில் அடைக்கப்பட்ட இடம்
·  மொத்தத்தில் கால்நடைப்பட்டியில் அடைக்கப்பட்ட நாளிருந்து 15 தினங்களுக்குள் கால்நடைகளை ஏலம் விடுவதற்கு முன்பு கால்நடைகளின் சொந்தக்காரர் அல்லது முகவர் கால்நடைகளை விடுவிக்கக் கோரினால் அந்த நாள் வரை ஆகும் அபராதம் , தீனிச் செலவு ஆகியவற்றை வசூலித்துக் கொண்டு கால்நடைகளை விடுவிக்கலாம். 
கால்நடைகளை ஏலம் விடுவது:
·  அறிவிப்பு செய்த நாள் முதல் 7-தினங்களுக்குள்ளாக கால்நடைகளை விடுவிக்கும்படி யாரும் கேட்காத நிலையில் அவற்றை பகிரங்கமான ஏலத்தில் விற்பனை செய்ய வேண்டும்.
·  இந்த ஏலத்தை வருவாய் ஆய்வாளர் நடத்த வேண்டும்.
·  ஏலத்தில் அதிகபட்ச தொகைக்குக் கோரிய ஏலதாரரிடம் ஏலத்தொகையை முழுமையாக வசூலித்துக் கொண்டு கால்நடைகளை அவருக்கு விடுவிக்க வேண்டும். பொதுவாக ஒரு பட்டியில் அடைக்கப்பட்ட ஒருவருக்கே சொந்தமான பல கால்நடைகளையும் ஏலம் போட அவசியம் இல்லை.
·  சில கால்நடைகளை மட்டும் ஏலம் விடுவதினால் அந்தப் பட்டியில் அடைக்கப்பட்ட ஒருவருடைய மொத்த கால்நடைகளுக்கு ஆகும் அபராதம், தீனிச் செலவு போதுமானதாக இருந்தால் அத்தகைய குறைந்த கால்நடைகளை ஏலம்விட்டு அந்த தொகையில் அரசுக்கு சேர வேண்டிய அபராதம், கால்நடை தீனி மற்றும் ஏலம் விடுவதற்கு ஆகும் செலவை கழித்துக் கொண்டு மிகுதி இருந்தால் அந்தத் தொகையும் மற்றும் மிகுதியான கால்நடைகளின் உரிமையாளர் யார் என்று தெரிய வந்தால் அவரிடம் ஒப்படைத்துவிட்டு அதற்கான எழுத்து மூலமான ரசீதை பெற்றுக் கொள்ளலாம்.
·  கால்நடைகளின் உரிமையாளர் யார் என்று தெரியாத நிலையில் அனைத்து கால்நடைகளையும் ஏலம் விடவேண்டும்.
·  அரசுக்குச் சேர வேண்டிய அபராதம் தீனிச் செலவு மற்றும் ஏலம் நடத்தியதற்கான செலவுகளை கழித்துக்கொண்டு மீதித் தொகையை அரசாங்க வைப்பு நிதியில் வைத்து பிற்காலத்தில் உரிமையாளருக்கு திருப்பித் தரலாம்.
·  ஏலத்தில் கால்நடைகளுக்கு தகுந்த விலை கிடைக்காவிட்டாலும் , யாரும் ஏலம் கேட்காத நிலையிலும் உடனடியாக வட்டாட்சியருக்கு தெரிவித்து, அந்தக் கால்நடைகளை எம்முறையில் முடிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரின் ஆணையைப் பெற்று மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
·  ஏலம் விடுவதற்கு முன்பே அடைக்கப்பட்ட கால்நடை ஏதேனும் இறந்துவிட்டால் அதனை காப்பாளர் புதைத்துவிட்டு வட்டாட்சியருக்கு தெரிவிக்க வேண்டும். 
காப்பாளர் ஊதியம்:
·  கிராம நிர்வாக அலுவலர்கள் முழுநேர அலுவலர்களாக இருப்பதால் காப்பாளரின் ஊதியமாக அவர்களுக்கு அபராதத்தில் கமிஷன் தொகை வழங்க வேண்டியது இல்லை.
·  கால்நடைகளுக்கான தீனிச் செலவை மட்டும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கலாம்.
·  வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையை முழுவதும் வங்கியில் செலுத்திவிட வேண்டும். 
கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள் :
·  பட்டிக் காப்பாளரான கிராம நிர்வாக அலுவலர் மாத இறுதியில் வட்டாட்சியரால் நிர்ணயிக்கப்பட்ட தேதியில் கணக்குகளை முடித்து படிவம் 34, 35, 36 ஆகிய படிவங்களின் ஒரு பிரதியை செலுத்துப் பட்டியலுடன் வட்டாட்சியருக்கு அனுப்ப வேண்டும்.
·  இந்தப் பட்டியலினை வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பட்டியலுடன் சரிபார்த்து பட்டியலில் உள்ள வசூலிக்கப்பட்ட தொகையை செலுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்.
·  கால்நடைப்பட்டியில் சேகரிக்கப்படும் எருவை அதற்கு நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைத்துவிட்டு அதற்குண்டான தொகையை வசூலித்துக் கொண்டு அதனையும் அரசுக் கணக்கில் செலுத்தி விட வேண்டும்.
·  கால்நடைப்பட்டியைச் சரியான முறையில் பராமரிப்பது கிராம நிர்வாக அலுவலரின் பொறுப்பாகும்.
·  தற்போது பெரும்பாலான பகுதிகளில் கால்நடைப் பட்டிகள் கிடையாது. அதற்காக கட்டியிருந்த கட்டடங்கள் சேதமடைந்துவிட்டது. எனவே அந்த கட்டடங்கள் அனைத்தும் வருவாய்த்துறைக்குச் சொந்தமானதாகும்.
·  இக்காலிப் பணியிடங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது கிராம நிர்வாக அலுவலரின் கடமையாகும். 
கிராமச் சாவடிகள்:
·  கடந்த காலங்களில் ஒரு கிராமத்திற்கு அலுவலர்கள் செல்லும்போது அரசுப் பணிகளை மேற்கொள்ளவும் தங்கவும் குறிப்பிட்ட கிராமங்களில் கிராமச் சாவடிகள் பராமரிக்கப்பட்டு வந்தன.
·  அதனை தற்போது கிராம நிர்வாக அலுவலக கட்டடங்களாகவும் சில இடங்களில் அலுவலகம் மற்றும் குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்டுள்ளது.
·  இத்தகைய பொது கட்டடங்களை பதிவேட்டில் பதிவுசெய்து கண்காணிப்பது கிராம நிர்வாக அலுவலர்களின் பொறுப்பாகும்.
·  சில பகுதிகளில் கட்டடங்கள் இருந்த இடங்கள் காலியாகயிருந்து வருகிறது. அதனையும் பாதுகாக்க வேண்டியது கிராம நிர்வாக அலுவலரின் கடமையாகும். 
பொதுக் கட்டடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கில் உள்ள சொத்துகளைப் பாதுகாத்தல்

(அ) கட்டடங்கள் :
·  அனைத்து அரசுக் கட்டடங்களையும் நீர்ப்பாசன வேலைகளையும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது கிராம நிர்வாக அலுவலரின் பொறுப்பாகும்.
·  இந்த கட்டடங்களில் ஏதேனும் பழுது பார்க்க வேண்டியிருந்தால் அதனை உடன் வட்டாட்சியருக்கு தெரிவிக்க வேண்டும்.
·  இருப்புப்பாதை தடத்தில் உள்ள அரசு நீர்ப்பாசன வேலைகள் (ம) தனியார் நீர்ப்-பாசனங்கள் எவையேனும் அந்த இருப்புப் பாதைக்கு அபாயம் ஏற்படுத்தும் நிலையிருந்தால் அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
·  பொதுவாக கிராமத்தில் உள்ள பள்ளிகள், பொதுமக்கள் பாதுகாப்புக்காகத் தங்கும் புயல் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவை பழுதடைந்தால் அதனை மழைக்காலம் துவங்கும் முன்பே சரிசெய்ய வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். 
(ஆ) இதர அரசாங்கச் சொத்தைப் பாதுகாத்தல்:
·  கிராமத்தில் அமைந்திருக்கும் சாலைகள், வீதிகள், சதுக்கங்கள், திறந்தவெளியிடங்கள் ஆகிய பொதுமக்களால் உபயோகப்படுத்தப்படும் நிலங்களில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்யாதபடி பாதுகாப்பது கிராம நிர்வாக அலுவலர் பொறுப்பாகும்.
·  கிராம எல்லைக்குள் இராணுவப் படைகள் தங்கும் இடங்கள் இருந்தால் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
·  அரசாங்க தரிசு நிலங்களிலும் புறம்போக்கு நிலங்களிலும் உள்ள மரங்கள் (ம) இதர சொத்துகளுக்கும் எவ்வித இழப்பு வந்தாலும் பழுது நேரிட்டாலும் உடன் வட்டாட்சியருக்கு தெரிவிக்க வேண்டும். 
(இ) மரங்கள்:
·  அரசாங்க நிலங்களில் உள்ள (ஒதுக்கப்பட்ட காடுகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் தவிர) மரங்கள் அனைத்தையும் பாதுகாப்பது கிராம நிர்வாக அலுவலரின் கடமையாகும்.
·  கிராம நிர்வாக அலுவலர் சாகுபடி பதிவு செய்ய புலத் தணிக்கை செய்யும் போது புறம்போக்கு நிலங்களில் உள்ள எல்லா மரங்களையும் கிராமக் கணக்கு எண் 2-இல் பதிவு செய்ய வேண்டும்.
·  ஊராட்சி மன்றத்துக்கு ஒப்படைக்கப்பட்ட நிலங்களில் உள்ள மரங்களை ஊராட்சி மன்றம் உரிமை கொண்டாடலாம். இம் மரங்களை யாரும் கள்ளத்தனமாக வெட்ட அனுமதிக்காமல் பார்த்துக்கொள்வது கிராம நிர்வாக அலுவலரின் கடமையாகும்.
·  கிராம எல்லைக்குள் இருக்கும் தரிசு நிலங்களிலும், புறம்போக்கு நிலங்களிலும் உள்ள எந்த மரமாவது பட்டுப் போய் இருந்தாலும் காற்று அடித்து விழுந்தாலும் வட்டாட்சியருக்குத் தெரிவித்து அவைகளை உடனே விற்பனை செய்ய உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
·  ஏலம் விடப்பட்ட மரத் துண்டுகளை எடுத்துக்கொண்டும் செல்லும் போது அவை எங்கு வெட்டப்பட்டுள்ளன. எந்த வகையைச் சேர்ந்தது, தோராய எடை ஆகிய விவரங்கள் அடங்கிய ஒரு சான்றினை கிராம நிர்வாக அலுவலர் வழங்க வேண்டும்.
·  கள்ளத்தனமாகப் புறம்போக்கு நிலங்களில் உள்ள மரவெட்டுகளை உடனே தடுத்து நிறுத்துவதோடு தொடர் நடவடிக்கை எடுக்க வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். அரசு மரங்களை கள்ளத்தனமாக வெட்டியது கிராம நிர்வாக அலுவலரின் கவனக்குறைவின் காரணமாக நிகழ்ந்தது என்று தெரிய வந்தால் அவர் நடவடிக்கைக்கு உட்படுவார்.
·  கிராம நிர்வாக அலுவலர்கள் தனி நபர்களை தோப்புகள் மற்றும் மரங்களை வளர்ப்பதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.
·  ஒதுக்கப்பட்ட காடுகளில் கள்ளத்தனமாக மரம் வெட்டுதல் நிகழும் போது அதனை உடனடியாக மேலிடத்திற்கு தெரிவிக்க வேண்டியது கிராம நிர்வாக அலுவலரின் கடமையாகும். சில நேரங்களில் காடுகளில் தீப்பற்றிக் கொண்டால் அதனை அனைப்பதிலும் அந்தத் தீ பரவாமல் தடுப்பதற்கும் கிராம நிர்வாக அலுவலர் உதவ வேண்டும்.
·  அரசாங்கப் புறம்போக்கில் பயந்தரும் நிலையில் உள்ள மரங்களின் (2-C பட்டா மரங்கள் தவிர) மகசூல் ஏலம் விட வட்டாட்சியருக்கு முன்னதாகவே உரிய அறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
·  பச்சை மரங்களை வெட்ட அனுமதி வழங்கும் அதிகாரம் வருவாய் கோட்ட அலுவலருக்கு மட்டும் உள்ளது (காடுகள் தவிர (ம) கமிட்டி முடிவு செய்யக்கூடிய மரங்கள் தவிர) இதனை கிராம நிர்வாக அலுவலர் முக்கியமாகக் கவனத்தில் வைத்திருக்க வேண்டும் 
2C கணக்கு மரங்களை கிராம நிர்வாக அலுவலர்கள் பாதுகாப்பது
·  2C பட்டா பெறாமல் தனிப்பட்டவர்கள் புறம்போக்கு நிலங்களில் உள்ள மரங்களின் மகசூலை அனுபவிக்க அனுமதிக்கக் கூடாது.
·  2C பட்டாவிலுள்ள மரங்கள் பட்டுப்போனால் அதனை ஏலம் விட வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பி அதனை ஏலம் விட்ட பிறகு 2C கணக்கிலிருந்து நீக்க வேண்டும்.
·  2C நிபந்தனைகளுக்குட்பட்டு மரங்களை பாதுகாப்பது பட்டாதாரருடைய கடமையாகும் நிபந்தனைகள் மீறப்பட்டால் அதனை கிராம நிர்வாக அலுவலர்கள் வட்டாட்சியருக்கு தெரிவித்து 2C மரப்பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டாட்சியர் 2C பட்டாவை ரத்து செய்து பின் அந்த உத்தரவின் அடிப்படையில் 2C கணக்குகில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
·  கள்ளத்தனமாக வெட்டப்படும் 2C மரங்களை உரிய நடவடிக்கைக்கு பின் 2C கணக்குகளிருந்து நீக்க வேண்டும். ஆக 2C கணக்கின்படி பூமியில் உள்ள எல்லா மரங்களும் இருந்தாக வேண்டும்.
·  தற்போதுள்ள 2C மரங்களின் விதிப்பு விகிதங்கள்
·  புளிய மரம் - 50.00
·  மாமரம் - 48.00
·  பலா - 50.00
·  தென்னை - 50.00
·  பனை - 5.00 (அரசு ஆணை எண் 542, வருவாய்த்துறை நாள் 14-06-1995.)
·  ஒரு குடும்பத்திற்கு ஒரு 2C பட்டாவீதம் ஒரு பட்டாவுக்கு அதிக பட்சமாக 5 புளிய மரங்கள் அல்லது 25 தென்னை மரங்கள் அல்லது 50 பனை மரங்கள் மிகாமல் உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
·  வனப்பகுதியிலுள்ள மரங்களை ஏலம் விடும்போது தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் மகளிருக்கே முன்னுரிமை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனை கிராம நிர்வாக அலுவலர்கள் கவனத்தில் கொண்டு 2C பட்டா வழங்குவதற்கு பரிந்துரை செய்ய வேண்டும். (அரசு ஆணை எண். 705, வருவாய்த்துறை நாள் 16-09-1992)